தமிழகத்தில் விவசாய பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து துரை வைக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சுமாா் 500க்கும் மேற்பட்டோருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜை மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதை தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ , தமிழகத்தில் பல மாவட்டங்களில், காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபகாலமாக இந்த பாதிப்பின் அளவு அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
எனவே விவசாயிகளுக்கும், விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை அழிக்க கேரள அரசைப் போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தமிழக அரசு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் கிராமக் குழுக்களை ஏற்படுத்தி குறைந்தபட்சம் அதன் மூலமாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். இதில், மதிமுக துணை பொது செயலா் ராஜேந்திரன், மாவட்ட செயலாளா்கள் ரமேஷ், செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் விநாயக ரமேஷ் உள்பட விவசாயிகள் பங்கேற்றனா்.