குடிப் பழக்கத்தால் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு, திருமணமான 14 மாதங்களிலேயே இளம் தம்பதி தூக்கில் தொங்கிய துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள நிம்பநேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பொற்பனையானுக்கும் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்துள்ள பிரியங்காவுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பொற்பனையான் சிப்காட்டில் எலக்ட்ரீசியனாகவும் பிரியங்கா ஆலங்குடியில் ஒரு துணிக்கடையிலும் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிந்து மாலை வீடு வரும்போது பொற்பனையான் மது போதையில் வருவதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தையும் இல்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் பிரியங்காவின் நகைகளை எடுத்துச் சென்ற பொற்பனையான் தங்க நகைகளை விற்றுவிட்டு அதேபோன்ற கவரிங் நகைகளை வீட்டில் வைத்துள்ளது தெரிய வந்ததால், மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு தாய் வீட்டிற்குச் சென்ற பிரியங்காவை உறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த பொற்பனையான், வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரியங்கா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொற்பனையானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கூலி வேலைக்குச் சென்றிருந்த பொற்பனையானின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகனும் மருமகளும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரது உடல்களையும் இறக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி 14 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடியால் ஒரு குடும்பமே அழிந்துவிட்டதே என்று அந்த கிராமமே கதறிக் கொண்டிருக்கின்றது.