அரசு அலுவலகத்தில் தொடரும் லஞ்சம்..!! லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்த அதிரடி முடிவு..!!
பட்டா மாற்றம் செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம், போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விஏஓ வேலைக்கு சென்ற கிராம உதவியாளர் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. 4000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளரை ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சகாயம். இவரது நண்பர் சென்னையை சேர்ந்த ஸ்வரன்ராஜ். இவர்கள் இருவரும் சேர்ந்து நெமிலி தாலுகா செல்வமந்தை கிராமத்தில் ஜெயராமன் என்பவரிடமிருந்து ஒரு ஏக்கர் 69 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர்.
இதற்கான பத்திரப்பதிவு முடிந்ததும் நிலம் வாங்கியவர்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் செல்வமந்தை விஏஓ லாக் இன் – ல் அந்த பட்டா வந்துள்ளது. ஆனால் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் விஏஓ தன்னுடைய லாக் இன் லேயே வைத்திருந்தார்.
இது தொடர்பாக நிலம் வாங்கிய சகாயத்தின் தம்பி தசரதன், விஏஓ சதீஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ. 4000 லஞ்சமாக தர வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு வந்த தசரதன் லஞ்சப் பணம் தர விரும்பாமல் ராணிப்பேட்டை பாரதி நகரில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து டி எஸ் பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்துக்கான நோட்டுகளை கொடுத்து விஏஓ சதீஷிடம் தருமாறு அனுப்பி வைத்தனர். போலீசார் தெரிவித்தபடி தசரதன், அலுவலகத்தில் இருந்த விஏஓ சதீஷிடம் பணம் கொடுக்க முயன்றுள்ளார்.
அப்போது கிராம உதவியாளர் ராஜலிங்கத்திடம் பணத்தை தருமாறு விஏஓ சதீஷ் கூறியதாக தெரிகிறது. அதன்படி தசரதன் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ சதீஷ் அவரது உதவியாளர் ராஜலிங்கம் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர் .
மேலும் ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விஏஓ சதீஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விஏஓவாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு என லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகம் பாரதி நகரில் இயங்கி வருகிறது. லஞ்சம் தர விரும்பாதவர்கள் இந்த அலுவலகத்தில் 04172 299200 என்ற எண்ணில் அல்லது நேரில் புகார் செய்யலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..