ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்தார்.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இது தொடர்பாக தனது கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.
அதே நேரத்தில் அழுத்தம்திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது.
மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்.
எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்குமென எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம்.
இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும் என பதிவிட்டுள்ளார்.