கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவில் கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடியில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் இரவு உணவு அருந்திய பின்னர் உறங்கிக்கொண்டிருந்தனர். சுமார் 11.30 மணிக்கு, பெரிய சத்தம் ஒன்று கேட்க, உறக்கத்தில் இருந்த அனைவரும் கண்விழிப்பதற்குள், பெரிய பெரிய பாறைகள் உருண்டு வந்து வீடுகளை உடைத்து நொறுக்கியது. அதன் மீது மணல் சரிந்து குவிந்தது. தொடர்மழை, தேயிலை எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் 70 பேர் மண்ணில் புதைந்து உயிர் இழந்தனர்.
நிலச்சரி நடந்த அடுத்த நாள் குவி என்று ஒரு வளர்ப்பு நாய் அஙுகுமிங்கும் பதைபதைத்தபடி எஜமானர்களை தேடிக் கொண்டிருந்தது. இந்த நாயின் தவிப்பை உணர்ந்த மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் அதை கண்காணித்தனர். நீரோடை ஒன்றின் அருகே போய் நின்ற அந்த நாய், தொடர்ச்சியாகக் குரைக்க, அந்த இடத்தினை தோண்டியது மீட்புக் குழு. அங்கே இரண்டை வயதுக் குழந்தை தனுஷ்காவின் உடல் இருந்தது. இந்த குழந்தையின் வளர்ப்பு நாய்தான் குவி. இந்த சம்பவம் மீட்புப் பணியில் இருந்த அனைவரையும் உலுக்கி எடுத்தது. இந்த நிலச்சரிவில் குவி தனுஷ்கா உள்பட தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்திருந்தது.
இதனால், பெரும் சோகத்துடன் அந்த பகுதியையை சுற்றி வந்தது குவி . மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் அதற்கு உணவளித்தாலும் சாப்பிட மறுத்தது. தொடர்ந்து, சில நாட்கள் கழித்து நாய்களுக்கு பயிற்சி கொடுக்கும் பிரபல பயிற்சியாளர் அஜித் மாதவன் குவியை தத்து எடுத்துக் கொண்டார். தற்போது, பழைய சோகத்தை மறந்த குவி பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. அதோடு, Najas – An Impure Story என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் குவியும், அதனுடன் சேர்ந்த நடித்த மற்றொரு நாயான டியூட் இரண்டும் சேர்ந்து போஸ்டர்களை வெளியிட்டன. ஸ்ரீதித் போயில்காவு என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக குவி 6 மாதங்கள் பயிற்சி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.