பஹால்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான அசாசுதீன் ஓவைசி கடுமையாக பாகிஸ்தானை தாக்கியுள்ளார். அவர் பேசியதாவது, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் போல செயல்படுகிறது. மதத்தை கேட்டு கேட்டு தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இவர்கள் எந்த விதமான மனிதர்கள்? இந்தியாவுடன் மோதலில் ஈடுபட பாகிஸ்தான் ஆர்வம் காட்டக் கூடாது.
இந்தியாவின் ராணுவ வலிமையும், பொருளாதார வலிமையும் உங்களுக்கு இருக்கிறதா? எங்களை விட நீங்கள் 50 ஆண்டு காலம் பின்தங்கியுள்ளீர்கள். உங்கள் நாட்டின் மொத்த பட்ஜெட் எங்களின் ராணுவ பட்ஜெட். அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை மிரட்ட நினைக்க வேண்டாம். மற்றொரு நாட்டின் அப்பாவி மக்களை கொன்றால், எந்த நாடும் பார்த்துக் கொண்டிருக்காது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பதிலடி கொடுத்தால் முழுமையான போரை நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அச்சுறுத்துகிறார்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது போலவே, காஷ்மீர் மக்களும் நமது சொந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நான் கூற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான், சமா உள்ளிட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயக் அக்தரின் யூடியூப் சேனலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல்கள் அனைத்தும் சேர்ந்து 6 கோடியே 30 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளன. கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹால்காம் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிசிசி நிறுவனத்துக்கும் மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதிகளை போராளிகள் என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது. போராளிகள் என்ற வார்த்தை பயன்படுத்தியதை மத்திய அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது. தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தை கண்காணிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.