கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, போக்குவரத்து மற்றும் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் இப்போது முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறது. எனினும், வருங்காலத்தில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் வேறு விதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின் போது, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த மிகவும் விரும்பப்படும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்தது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 547 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2024ம் ஆண்டு 0.48 மில்லியனாக குறைந்தது.
தற்போது, அட்டாரி வாகா பாதை மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பொருட்கள் அனுப்புவது குறைந்தாலும் வேறு வழியாக வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. அதாவது, சிங்கப்பூர், அமீரகம் வழியாக பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறலாம்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு டெட்லைனுக்குள் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கேட்டுக் கொண்டுள்ளார். புனே நகரில் இருந்த 111 பாகிஸ்தானியர்கள் வரும் 27ம் தேதிக்கு வெளியேற உத்தரவிடப்பபட்டுள்ளது. மெடிக்கல் விசாவில் வந்தவர்களுக்கு மட்டும் கூடுதலாக இரு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவுரங்கஷிப் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி ஷாம்பாஜி நகரில் மட்டும் 57 பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளனர். அவர்களை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.