ஜம்மு காஷ்மீரில் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்தது. பாகிஸ்தானில் இருந்து பல நடிகர், நடிகைகள் இந்த சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெக்பாஸ் ஷெரீப் இந்த தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக கண்டித்துள்ளார்.
‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை?. உங்கள் படைகள் ஏன் திடீரென்று மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன? ஏனென்றால் ஆழமாகப் பார்த்தால், நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால், உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்’ என்று கடுமையாக தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்து மதத்தை சேர்ந்த இரண்டாவது வீரர் டேனிஷ் கனேரியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த தாக்குதலையடுத்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுரை வழங்கியுள்ளனர். அமெரிக்கா ஏற்கனவே, தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு காஷ்மீரில் படிப்படியாக சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று வந்தது. அதற்கேற்ற வகையில், மத்திய அரசும் பல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் காஷ்மீருக்கு வர புக் செய்தவர்கள் கேன்சல் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.