நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா 2023-க்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடித்ததில் குறிப்பிட்டது:
மத்திய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட திருத்த மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்.
இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.