கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் ராக்கெட் ஏவ ஏவுதளம் கூட கிடையாது. ஆனால்,செயற்கை கோளை இஸ்ரோ தயாரித்து விட்டது. அதற்கு, வானவியல் சாஸ்திர ஆய்வாளர் ஆர்யபட்டரின் பெயரை வைத்தது.
கி.பி 476ம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஆர்யபட்டன் நாளந்தா பல்கலையில் பயின்றவர். மன்னர் சந்திரகுப்தர் அவரின் விண்வெளி அறிவை கண்டு வியந்து நாளந்தா பல்கலைக்கழக தலைவராக உயர்த்தினார். உலகம் தட்டையானது என்று நம்பிய காலக்கட்டத்தில் உலகம் உருண்டையானது என்று உலகுக்கு உறுதியாக சொன்னவர் இவரே. நிலவுக்கு சுயமாக ஒளிரும் தன்மை இல்லை. சூரிய ஒளியை பெற்றே ஒளிர்கிறது என்று அந்த காலத்திலேயே கண்டுபிடித்தவர். அத்தகைய பெருமைமிக்க மனிதரின் பெயரைதான், இந்தியா தான் கண்டுபிடித்த முதல் செயற்கைக் கோளுக்கு சூட்டியது. செயற்கை கோளும் தயாரித்தாகி விட்டது. பெயரும் வைத்தாகி விட்டது. ஆனால், லாஞ்சிங் பேட் இல்லையே? என்ன செய்வது என்று குழப்பம் நிலவியது.
அப்போதுதான் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவை அணுகியது இந்தியா. அமெரிக்காவுடன் கடும் மோதலில் அப்போது, ரஷ்யா ஈடுபட்டுக் கொண்டிருந்ததது. இந்த காலக்கட்டத்தில் இந்திய துறைமுகங்களை ரஷ்ய கடற்படை கப்பல்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்துடன் ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்த ரஷ்யா ஒப்புக் கொண்டது. தொடர்ந்து, 1975 ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ரஷ்யாவின் கபூஸ்டின் யார் லாஞ்சிங் பேடில் இருந்து காஸ்மோஸ் 3 ராக்கெட் வழியாக ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியா வெளியிட்ட 2 ரூபாய் நோட்டில் ஆர்யபட்டாவின் படம் அச்சிடப்பட்டது. ஆனாலும், ஆர்யபட்டா செயற்கைகோள் வெற்றி பெறவில்லை.
புவிவட்டபாதையில் சுற்ற தொடங்கிய 5வது நாள் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் ஆர்யபட்டா தொடர்பை இழந்தது. இதனால், இஸ்ரோ குழுவினர் சோகமடைந்தனர். இந்த செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையாக கருதப்பட்ட விக்ரம் சாராபாய் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் உருவாக்கியிருந்தனர். செயற்கை கோள் தொடர்பை இழந்தாலும் குழுவினர் சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து, அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளில் இறங்கினர். விண்வெளியில் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இன்று இந்தியா வளர்ந்துள்ளது என்றால் மிகையல்ல.