மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ., தள்ளியிருக்கும் சாய்ரங் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கு 40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. “இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் போலீசார் தெரிவித்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மிசோ இளைஞர் சங்கத்தின் சாய்ராங் கிளையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து வடகிழக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் சப்யசாச்சி தே கூறுகையில், “இடிந்து விழுந்த பாலம் வடகிழக்கு பகுதிகளின் அனைத்து தலைநகரங்களையும் இணைக்கும் இந்திய ரயில்வேயின் திட்டத்தின் ஓர் அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த விபத்து சுமார் 11 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து நடக்கும் போது எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது குறித்தும் இன்னும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்.