குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ். அங்கு இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதையடுத்து, வெள்ளித்திரையிலும் கால் பாதிக்க தொடங்கிய இவர், சந்தானத்துடன் சபாபதி, அருண் விஜய்யின் யானை, உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். அதேபோல், சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக புகழ் அறிமுகமாக இருக்கிறார். அந்த படத்தை இயக்குனர் ஜே. சுரேஷ் இயக்கி வருகிறார். இதில் புகழிற்கு ஜோடியாக நடிகை ஷிரின் காஞ்சவாலா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் போஸ்டர் நேற்று(மார்ச்.20) குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் புகழ் கையில் கிளியுடன் காட்டிற்குள் அமர்ந்திருப்பது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.