அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பட்டது.
அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று(மார்ச்.21) காலை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகினார். அப்போது பேசிய அவர், அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.
தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே.
சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக் கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை; அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன். ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர் விஜயகுமார் கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஆஜராகும்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இன்று மூன்றரைமணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.