உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கே. எஸ்.ஓ அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ ராமச்சந்திரா அகடாமி சார்பில் ஷுகான் ஹூசைனீஸ் இஷின்றியூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவ மாணவிகளின் மாநில அளவில் சாதனை விழா நடைபெற்றது. கராத்தே பயிற்றுனர் சசிகுமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலைய மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென 6 அடி அகலத்திற்கு இடிந்து கீழே விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.. இதேபோல் பேருந்து நிலையத்தில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாக சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள ஐயர் கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக் கூடத்தை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் துவக்கி வைத்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர், வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக் கணத்திலேயே கண்முன் காட்சிப்படுத்த முடிகிறது என்று கூறினார்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர்திறந்து விட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை ஜீரோபாயிண்டிற்கு 152 கிலோமீட்டர் தூரம் தண்ணீர் வந்தடைந்தது. இதனை கும்மிடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் உட்பட தமிழகம் மற்றும் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.