உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயானகொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கொங்கியம்மன் ஆலயத்தில் இருந்து திருநங்கையர்கள் தெய்வீக வேடம் அணிந்து, அருளாடி ஊர்வலமாக வந்து அசுரனை வதம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காய்கறிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதியவர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர் உரிமம் வழங்குவதை தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் ரத்து செய்ய வேண்டுமென அரியலூரில் 50க்கும் மேற்பட்ட கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூரில் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் விதிமுறைகளை மீறி ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலான ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. அதன் பேரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயா தலைமையிலான காவல்துறையினர் மத்திய பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒன்பது பேருந்துகளில் இருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் 5 அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட 9 பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை பருவம் வர உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலங்களில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் பயன் பெரும் வகையில் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து தாரக்கோரி மாநில அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி சண்முகம் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சப்பைகளை சைக்கிளில் எடுத்து கொண்டு பேரணியாக சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ஆலாடு ஊராட்சியில் இறால் பண்ணை என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருடப்படுவதாகவும், இதற்கு பொன்னேரி காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலங்கள் பாதிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவாசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.