சென்னையில் 133.32 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள்..!! 11பேருக்கு காசோலை..!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 57.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம் மற்றும் கோயம்புத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, 40.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 5 தொழிற்பேட்டைகள் மற்றும் சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 35.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பொது வசதி மையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன் பின்னர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் பட்டு விவசாயிகள் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளர்கள் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு சு.ஜேக்கப் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வை. அருள்குமரனுக்கும், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான முதல் பரிசாக 1ரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நா.மஞ்சுநாதாவுக்கும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.நாகராஜூக்கும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சே.சாந்த முர்த்திக்கும் வழங்கினார்.
மொத்தம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11 பட்டு விவசாயிகள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள், தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கதர்த் துறைச் செயலாளர் அமுதவல்லி, பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.