தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்..!
தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்புத் திட்ட செயலாக்க துறை மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம்.
கடந்த ஆண்டு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்றுள்ளன? எவ்வளவு பணிகள் முடிவுற்றன? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துள்ளோம். தற்போது அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார்.
பின்னர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இதுதொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து, தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்.