வயநாடு மீட்புப் பணிகள்.. பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..
லெப்டினன்ட் கர்னல் மோகன்லால் வயநாட்டிற்கு சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். கேரளத்தின் வயநாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்த நிலையில், இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால், மேப்பாடியில் உள்ள தற்காலிக இராணுவ முகாமில் இராணுவ அதிகாரிகளுடன், மீட்புப் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைக்கு, இராணுவ வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனிடையே வயநாடு துயரச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 3 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்