கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞரின் நினைவு நாளையொட்டி சென்னை ஓமந்தூரில் உள்ள அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அமைதி பேரணி சென்றனர்.இந்த பேரணியின் முடிவில் கலைஞரின் நினைவிடத்தில் வண்ண பூக்கள் கொண்டு அலங்கரித்து மற்றும் அவரின் 5 ஆண்டு நினைவு பற்றி வண்ண பூக்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்த அமைதி பேரணியில் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு என அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த பேரணியில் பங்கேற்ற திமுகவின் செயற்குழு உறுப்பினரும், 146 வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் பேரணி தொடங்கி சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். அவருடன் வந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய நிலையில், அவர் எழும்பாததால் ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post