வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்த கேபிள் ஆப்ரேட்டரான துரைவர்மா (49) எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, நேற்று(மார்ச்.25) இரவு எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (மார்ச்.25) நள்ளிரவு எலக்ட்ரிக் பைக் பேட்டரி தீடிரென வெடித்து சிதறியதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்த துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகன பிரீத்தி (13) மூச்சு திணறி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கழிவறையில் இருந்து தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.