ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் இன்று(மார்ச்.26) 26-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.
தமிழகத்தில் 100% இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு, கோவை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.
கொரோனா தொற்று உலகை விட்டு இன்னும் நீங்கவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக அளவில் தொற்று அச்சம் இருக்கிறது.
தென் கொரியா, ரஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இன்னும் லட்சக்கணக்கில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. ஏற்கனவே கான்பூர் ஐ.ஐ.டி. மற்றும் பல மருத்துவ வல்லுனர்கள் சொல்லி இருக்கும் கருத்துப்படி, ஜூன் மாதத்தில் கொரோனா 4-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதால் அதில் இருந்து நாம் மீள்வதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என தெரிவித்துள்ளார்.