சென்னை தலைமைச் செயலகத்தில் திஷா குழு கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், கேரளாவை போல தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது பாராட்டுதற்குறியது எனவும், அதே வேளையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது பெரும் பிரச்சனையாக முன் வைக்கப்படுவதால் அதனை சரி செய்யக்கூடிய வகையில் ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக கூறினார்.
மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிருக்கும் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், குடிசை பகுதியில் வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கும் போது 6.5 லட்சம் செலுத்த வேண்டும் என கேட்கப்படுவதால், அந்த வரையறையை மாற்ற வேண்டும் என கோரியுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், பிரதமரின் அனைவருக்கு வீடு திட்டத்தில் ஐந்து லட்சம் குறைந்தபட்சம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு நிதி வழங்கப்பட்டாலும், பற்றாக்குறை நிதியை மாநில அரசு ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளை கட்ட முன்வர வேண்டும் எனவும் கூறினார்.
நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், அரசு தரமான மருத்துவத்தை வழங்கி உள்ளதாகவும், குறிப்பாக சின்னத்துரையின் கை மற்றும் கால்களில் நரம்புகள், தசைகள், எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைலிருந்து தலைசிறந்த அறுவை சிகிச்சை குழு பல மணி நேரம் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்து மிகச் சிறப்பான முறையில் மீண்டும் இயல்பான வகையில் எழக்கூடிய வகையில் மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என கூறிய அவர், சின்னதுரையின் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாளை தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரை சந்தித்ததாகவும் அவர் கூறினார்
Discussion about this post