நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக மாட்டின் உரிமையாளர், மின்வாரியத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், சங்கு வளையல்கள் உள்ளிட்ட அலங்கார தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் சின்னகுனிச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்று சீறி பாய்ந்து ஓடின குறைந்த வினாடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு, பணம் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டு ரசித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 18 பெண்களில் ஒருவருக்கு பலத்த காயமும் மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்குனம்குள்ளைமேடு ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளியில் சத்துணவில் முட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு சத்துணவு ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.