உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே பைன்சூமா போலீஸ நிலையத்துக்குட்பட்ட அக்பர்பூர் சதாத் கிராமத்தில் இரு நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டிலில் படுத்துக் கிடந்த அமித் என்பவர் சடலமாகக் கிடந்தார். அவரின் சடலத்துக்கு அருகிலேயே நல்ல பாம்பு ஒன்றும் உயிருடன் பிடிபட்டது. இதையடுத்து, அமித் நல்லபாம்பு கடித்து இறந்து விட்டதாக கிராமத்தினர் நம்பினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவியது.
கிட்டத்தட்ட 10 முறை நல்லபாம்பு அமித்தை கடித்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து, போலீசார் அமித்தின் உடலை மீட்டு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஆனால் , உடற் கூறு ஆய்வில் அமித்தின் உடலில் ஒரு சொட்டு விஷம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், போலீசாருக்கு தலையே சுற்றியது. அப்படியென்றால், அமித்தின் இறப்புக்கு காரணம் யார் ? தலையை பிய்த்துக் கொண்டனர்.
அதே வேளையில், உடற் கூறு ஆய்வில் அமித் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. போலீசாரின் சந்தேகம் மெல்ல மெல்ல அமித்தின் மனைவி ரவீதா மீது திரும்பியது. இதையடுத்து, அவரிடத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ரவீதா தனது ஆண் நண்பர் அமர்ஜீத்துடன் இணைந்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அதாவது, அமித்தை கழுத்தை நெறித்து கொன்று விட்டு பாம்பு கடித்து இறந்தது போல நாடகமாடியுள்ளனர். அமித்தின் உடலில் இருந்து உயிர் போய் விட்டது. ரத்த ஓட்டம் நின்று விட்டதால், பாம்பு கடித்தாலும் உடலில் விஷம் பரவவவில்லை. இதனால், ரவீதா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து நாடகமாடிய அம்பலத்துக்கு வந்து விட்டது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.