தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன.
தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி வரும் 10-ஆம் தேதி முதல் இயக்கப்படும்.
இதனை தொடர்ந்து, நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ஆம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.
ஏப்ரல்- 16 ஆம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.
இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.