உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசி வருகிறார்.
அந்த வகையில், இன்று காலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு 35 நிமிடங்கள் பேசினார். அப்போது, வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினையும் தொடர்புகொண்டு 50 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில், உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுமி உள்ளிட்ட சில பகுதிகளில் போர்நிறுத்தம் செய்ததற்காக புதினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post