எதிர் எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனம்… எதிர்பாரத விதமாக மோதி விபத்து…
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த தீனா(24) மற்றும் திவாகர்(19)ஆகிய இருவரும் நேற்று (ஆக.17) இரவு இருசக்கர வாகனத்தில் கம்பத்திலிருந்து சின்னமனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது உத்தமபாளையம் புதிய புறவழிச்சாலை பகுதியில் இருந்து அகமது மீரான்(45) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாகனங்களும் எதிர் எதிரே வந்ததால் எதிர்பாராத விதமாக இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று பேரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த உத்தமபாளையம் போலீசார், படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு இருவரையும், திவாகர் என்ற இளைஞரை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திவீர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவாகரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.