திருமணம் செய்து வைக்க சொல்லி செல்போன் டவர் மேல் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம், நாராயணபுரத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி தினேஷ் (22). இவா், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை17 ம் தேதியன்று அந்த சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றார். அப்போது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை மீட்ட மணிகண்டம் காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தில் தினேஷை கைது செய்து சிறையிலடைத்தனா்.
சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தான் காதலித்த பெண்ணுடன் மீண்டும் தொடர்பை புதுப்பித்துக் கொண்டார். அதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோரும் முடிவு செய்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் கோபித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தினேஷ், நேற்று நாகமங்கலம் பகுதியிலுள்ள செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டார். காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். பின்னர் தகவலறிந்து வந்த மணிகண்டம் காவல்துறையினர், தினேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தினேஷ் மற்றும் அந்த பெண்ணின் பெற்றோர் ஆகியோரை போலீஸார் அங்கு வரவழைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாரும் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷ் கீழே இறங்கி வந்தார். சுமார் 5 மணி நேரம் வெயிலில் நின்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மயக்க நிலைக்குச் சென்றார்.
Discussion about this post