தந்திரமாக பேச்சு.. விசிட்டிங் கார்டு கொடுத்து ஏமாற்றும் மர்ம கும்பல்.. மடக்கிப் பிடித்த போலீசார்..
பஞ்சத்தின் காரணமாக, வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, வடமாநிலங்களில் இருந்து, பல்வேறு தொழிலாளர்கள், தமிழகத்திற்கு வந்து பணிபுரிகின்றனர். இவ்வாறு பணிபுரியும் அந்த தொழிலாளர்கள், குருவி சேர்ப்பது போல பணத்தை சேர்த்து, தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், இதுமாதிரியான வடமாநில தொழிலாளர்களை குறி வைத்து, அவர்களது பணத்தை, கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. அதாவது, அசாம் மாநிலத்தை சேர்ந்த வாசிம் என்பவர், வேலை தேடி, ரயிலில் கேரளாவுக்கு சென்றுள்ளார். அப்போது, ரயிலில் அறிமுகமான இளைஞர் ஒருவர், தனது விசிட்டிங் கார்டை கொடுத்து, வேலை வேண்டும் என்றால், என்னை அணுகவும் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் வேலை கிடைக்காததால், விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு வாசிம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் பேசிய நபர், வேலை உள்ளது என்றும், ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், உங்களுடன் வேறு யாரையாவது அழைத்து செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய வாசிம், தன்னுடன் 3 பேரை அழைத்து சென்றுள்ளார். செல்போனில் பேசியவர் கூறிய இடத்திற்கு சென்றபோது, வடமாநில தொழிலாளர்கள் 4 பேரையும், மர்ம கும்பல் ஒன்று, அடித்து துன்புறுத்தியுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பணத்தையும், அவர்களது உறவினர்களிடம் ஜி பே மூலம் பணத்தை அனுப்ப சொல்லியும், ஒரு லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களிடமும், பணத்தை ஏமாற்றியுள்ளது அந்த கும்பல். பின்னர், இதுதொடர்பான புகாரை பெற்ற காவல்துறையினர், அந்த மர்ம கும்பலை தேடி வந்தனர். அப்போது, கேரளாவில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிய காவல்துறையினர், 6 பேரை கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரையும், போலீசார் தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்