அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்.. சுகாதார அமைச்சா் அதிரடி உத்தரவு..!
கேரளாவை சேர்ந்தவர் ரவீந்திரன் நாயா் 59 வயதாகும் இவர் கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அப்போது முதல் மாடிக்கு செல்ல படி ஏற முடியாமல் லிஃப்டில் சென்றுள்ளார். அவா் மட்டும் லிஃப்டில் சென்ற நிலையில் முதல் தளத்துக்குச் சென்ற லிஃப்ட் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக மீண்டும் தரைத்தளத்துக்கு வந்து திறக்காமல் அப்படியே நின்றுவிட்டது.
ரவீந்திரன் எவ்வளவு முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து, அவா் உதவிக்குரல் எழுப்பியும் வெளியே இருந்த யாருக்கும் அது கேட்கவில்லை.
லிஃப்டில் இருந்த அவசர உதவி பொத்தானை அழுத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை. அங்கிருந்த அவசரகால தொடா்பு எண்ணை தொடா்பு கொண்டபோதும் யாரும் அதை எடுத்துப் பேசவில்லை.
சிறிது நேரத்திலேயே ரவீந்திரன் நாயா் கையில் வைத்திருந்த கைப்பேசியும் ‘பேட்டரி’ தீா்ந்து அணைந்தது. அவரால் குடும்பத்தினரையும் தொடா்பு கொள்ள முடியாத சூழலால் ரவீந்திரன் லிஃப்ட்டுக்குள் சிக்கினாா்.
இதனிடையே, ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினா் அச்சமடைந்து திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தநிலையில், நேற்று மாலை லிஃப்ட்டை இயக்கும் பணியாளா் லிஃப்ட் இருந்த பகுதிக்கு வந்தபோது, ரவீந்திரன் மீண்டும் அவசர உதவி பொத்தானை அழுத்தினாா். அதன் பிறகுதான் மருத்துவமனைப் பணியாளா்களுக்கு லிஃப்டில் ஒருவா் சிக்கி இருப்பது தெரியவந்தது
இதையடுத்து, லிஃப்ட்டின் கதவை வெளியே இருந்து உடைத்து ரவீந்திரனை மீட்டனா். இருநாள் சாப்பாடு இல்லாமல் இருந்ததால் அவா் மிகவும் சோா்வடைந்த நிலையில் இருந்தாா். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவா் இருநாட்களாக லிஃப்டில் சிக்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் உத்தரவின் படி இந்த சம்பவம் தொடா்பாக மருத்துவமனையின் லிஃப்டை இயக்கும் பணியாளா்கள் இருவா் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இரண்டு நாட்களாக முதியவர் ஒருவர் லிப்ஃடில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்