எனது வெற்றியின் ரகசியம் இது தான்..! வீராங்கனை மனு பக்கர் பற்றிய ரகசியம்..!
33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகளானது வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் Air Pistol பெண்கள் பிரிவிற்கான போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் “மனு பக்கர்” என்ற வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அவரது இந்த வெற்றியின் பின்னே ஒரு பெரும் தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. அந்த வெற்றியன் ரகசியம் பற்றி இதில் படிக்கலாம்..
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த “மனு பக்கர் 2002-ல் பிறந்தவர். மிக இளம் வயதிலேயே அதாவது 15 வயதிலேயே தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டவர்.
2017ல் கேரளாவில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றார்.
2018 ல் மெக்சிகோவில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்று மிக இளம் வயதில் அதாவது 16 வயதில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைச் செய்தார்.
இப்படி பல சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்ற மனு பக்கர். 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார்.
10 மீட்டர் Air Pistol பிரிவில் மனு பக்கர் உறுதியாக தங்கம் வெல்வார் என அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அது தான் மனு பக்கர் கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி. எனவே அவரும் தங்கம் வெல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
போட்டிகள் தொடங்கி பின் மனு பக்கரின் துப்பாக்கி திடீரென வேலை செய்யவில்லை. அவரால் அதை சரி செய்ய முடியவில்லை. எனவே வெளியே வந்து துப்பாக்கியை சரி செய்து கொண்டு மீண்டும் உள்ளே வருகையில் நேரம் கடந்து விட்டது. 36 நிமிடங்களில் 44 ஷாட் சுட வேண்டும்.. என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.
இப்படியான ஒரு சூழலில் மனு பக்கரால் சரியாக செயல்பட முடியவில்லை. சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற அவரால், அந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாமல் தோற்று, உடைந்து வெளியே வந்தார்.
எப்போதுமே ஒரு விளையாட்டு வீரனுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது தான் உச்சபட்ச கனவாக இருக்கும்.அப்படியான ஒரு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து, உறுதியாகப் பதக்கம் வெல்ல முடியும் என்ற நிலையில், நன்றாக விளையாடிக் கொண்டிருக்கையில் துப்பாக்கியில் பிரச்சினை வந்து, திடீரென நடுவே சுட முடியாமல் போனதில் மனு பக்கர் நிறையவே உடைந்து போனார்.
நல்ல விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய மற்றொரு குணம் வெற்றியைப் போல தோல்வியையும் சரிசமமாக ஏற்றுக் கொள்வது. எனவே மனு பக்கர் அந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தந்த கசப்பான நினைவில் இருந்து மிக விரைவில் வெளியே வந்தார்.
ஆனால் அது கற்றுத் தந்த பாடங்களை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். விளைவு, அதன் பின் ஜூலை 28 ல் பாரீஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை மனு பக்கர் வென்று விட்டார்.
இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மிக இளம் வயதிலேயே செய்து விட்டார் மனு பக்கர்.
எனக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடம் எடுத்த வாத்தியார் ஒருவர், “நம்ம வாழ்க்கை எப்பயுமே Sinusoidal Wave மாதிரி தான் இருக்கனும். மேலே கீழே போய்ட்டு வந்துட்டு இருக்கனும். DC Current மாதிரி ஒரே ஸ்ட்ரெய்ட் லைனா இருந்தா.. அதுல என்ன சுவாரசியம் இருந்துறப் போகுது..” என அடிக்கடி சொல்வார்.
அது தான் உண்மை. அதற்கு மனு பக்கர் பெற்றுள்ள இந்த ஒலிம்பிக் பதக்க வெற்றியும் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்..