ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த மூவ் இது தான்..! ராகுல் காந்தி பதிவு..!
சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இரவு தனது மொபைலில் உணவு ஆர்டர் செய்துள்ளார் . அதன் பின் தனது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதை போல வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பின் இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் கூறியதாவது ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலையில் பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது , ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். குற்றவாளிகளை தமிழக அரசு விரைவில் சட்டத்தின் முன்நிறுத்தும் என நான் நம்புகிறேன்’’ . முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கொலை முயற்சியில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நான் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ