கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம்(மார்ச்.02) பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டுமென முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.