பக்கத்தில் கூட நிற்க மாட்டாங்க..; மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் – ஊரும் உறவும் 3
தினம் தினம் நாம் பேருந்திலோ அல்லது இரயிலிலோ பயணம் செய்யும் செல்லும் பொழுது பல முகங்களை சந்திப்போம் அதில் யாரவது ஒருவர் நமக்கு அறிமுகம் ஆவர். அவருடன் சிறிது நேரம் பேசிய பின் அவரை பற்றி தெரிந்துகொள்வோம் என்பதை விட.., அந்த மனிதர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அப்படி நான் சென்ற பயணத்தில் எனக்கு அறிமுகமானவர் “மேகலா அம்மா” இவர் யார், இவரின் வாழ்க்கை என்ன வென்று நீங்கள் நினைக்கலாம்..? அவரை பற்றி இதோ..,
மேகலா அம்மா துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். நான் ரயிலில் ஏறியதும் அவர் இருக்கும் இருக்கைக்கு அருகில் அமர்ந்தேன்.., நான் அமர்ந்ததும் என் பக்கத்தில் இருந்து எழுந்து சென்று விட்டார். சரி அடுத்த நிறுத்தத்தில் இறங்க போகிறார் போல என நான் நினைத்து கொண்டேன்.
ஆனால் அவர் இறங்கவில்லை நான் இறங்கிய இரயில் நிலையத்தில் என்னுடன் தான் இறங்கினார். என்னை பார்த்ததும் ஒதுங்கியே நின்றார். நான் சென்று கேட்டேன், ஏன் இப்படி ஒதுங்கியே நிற்கிறீர்கள் என்று.
அதற்கு அவர், துப்புரவு வேலை செய்பவள் காலையில் இருந்து மாலை வரை நின்று கொண்டே தான் இருப்பேன், அங்கு இருக்கும் குப்பைகளை களை அகற்றுவது என் வேலை.
ஆனால் குப்பையில் இருக்கும் துர்நாற்றம், காலையில் இருந்து மாலை வரை வெயில் நின்று கொண்டே வேலை செய்வதால் எங்கள் மீது வரும் வியர்வை நாற்றத்தால் யாரும் எங்கள் அருகில் உட்கார கூட நினைக்க மாட்டாங்க.
எங்கள பார்த்ததும் ஒதுங்கி தான் போவாங்க, அதனால நாங்களும் ரயில் ஏறினாள் இருக்கையில் அமர மாட்டோம். இரயில் பயணம் செய்யும் பொழுது யாரவது இதை கவனித்து இருக்கிறீர்களா.., துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இரயில் தரை தளத்தில் அமர்ந்து தான் பயணம் செய்வோம்.
இரவு பகல் என எங்களுக்கு ஷிப்ட் மாற்றி வேலை கொடுப்பார்கள், அதனால் சில நேரம் இரயில் இருக்கை காலியாக இருந்தால் உறங்கி கொண்டு வருவோம். ஆனால் எங்களை உறங்க கூட விட மாட்டார்கள். உடனே வந்து எழுப்பி விடுவார்கள்.
இரயில் தண்டவாளங்களில் சில சமயம் சுத்தம் செய்யும் பொழுது சிலர் மனித கழிவை, அப்படியே கழித்து விட்டு செல்வார்கள், அதை எல்லாம் பார்த்த பின் மதியம் சாப்பிடவே தோன்றாது.., இதை கஷ்டம் என்று நான் சொல்லவில்லை.
நான் செய்யும் தொழில் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இதை எல்லாம் செய்யும் எங்களை சக மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் என்பது தான் எங்களின் வருத்தம் என்று கூறிவிட்டு சென்றார்.
அவரிடம் பேசிய பின் தான் “துப்புரவு பணியாளர்கள்” மனதில் இவ்வளவு ஏக்கமா என்று தெரிந்துகொண்டேன். இனிமேலாவது துப்புரவு பணியாளர்களை கண்டால் ஒதுங்கி செல்லாமல் சிறு புன்னகை செய்து விட்டு செல்வோமே..
-வெ.லோகேஸ்வரி