ஒரே நாளில் 8 வீட்டில் திருட்டு..! இந்த பகுதியில் தொடரும் கொள்ளை..! குறிப்பாக இதுபோன்ற வீடுகளில்..!
ராணிப்பேட்டை ஒரே நாளில் அடுத்தடுத்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் வடமாம்பாக்கம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வட மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவர் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு வெளியில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், கணேசன் மறைந்த தனது மனைவியின் படத்துக்கு அணிவித்திருந்த நான்கரை சவரன் செயின், முக்கால் சவரன் தாலி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர் .
மேலும் அவரது வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர் . வடமாம்பாக்கம் காமராஜர் நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராம்கி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஜிமிக்கி, மாட்டல் என 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ. 50 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர் . மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி கால் கொலுசு ஒரு கிராம் மோதிரம் திருடியுள்ளனர்.
அதுமட்டுமன்றி கட்டட மேஸ்திரி செந்தில்குமார் மற்றும் ரமேஷ் உட்பட வட மாம்பாக்கம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து மொத்தம் 15 சவரன் நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
8 பேரின் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட பீரோக்களை உடைத்துள்ளனர். இவர்கள் எல்லோரும் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக அதாவது கொள்ளையர்கள் அதிகம் கஷ்டப்படாமல் வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்தும், மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் சென்று பீரோக்களை உடைத்துள்ளனர்.
குறிப்பாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து 8 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்ததால் வடமாம்பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து பகல் நேரத்தில் 2 பேர் வந்ததை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..