முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்..! வழக்கறிஞர் மேத்யூ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120அடியாக குறைத்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
இது தொடர்பாக வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தாக்கல் செய்த மனுவில், முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழமையான அணை எனவும் இது பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அணை உடைந்தால் கேரள பகுதியில் ஆலப்புழா, எர்ணாகுளம் கோட்டயம் பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக வைக்கக்கூடாது, அதனை 120 அடியாக குறைத்து நீரை தேக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.. ஏனெனில் முன்னதாக இந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்த போதிலும், அதனை கேரள அரசு முழு மனதுடன் ஏற்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் மக்களின் உயிர் சார்ந்த விவகாரம் என்பதால், முல்லைப்பெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் நீரை தேக்கக்கூடாது என தமிழ்நாடு, கேரளா என இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட புதிய அணை கட்ட வேண்டும் எனவும் இந்த வழக்கில் மனுதாரரான தாங்களே நேரில் ஆஜராகி வாதிட அனுமதி வழங்க வேண்டும் என வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.