ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை.. இறுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே மேலத்துக்குறிச்சி பகுதியில் உள்ள வயல் பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சுவாமிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், இறந்தது மூப்பக்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் தாமோதரன் என்பது தெரியவந்தது. இதன் பிறகு காவல்துறையினர் மூப்பக்கோவில் பகுதியில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பூச்சி (எ) தமிழரசன் (19) என்பவர் தனது எதிர்வீட்டில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. அந்த சிறுமியும் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு தமிழரசனுக்கும் அந்த சிறுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இந்தநிலையில், அதே தெருவில் உள்ள தாமோதரனை அந்த சிறுமி காதலித்தாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த தமிழரசன் தனது நண்பர்களான மேலகொட்டையூர் பகுதியை சேர்ந்த பரத் (20) மற்றும் 17 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு தாமோதரனிடம் அந்த சிறுமியின் உடனான காதலை நிறுத்த சொல்லி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் தாமோதரன் அந்த சிறுமியை காதலிப்பதை விட முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் தாமோதரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தமிழரசன் நேற்று முன்தினம் தாமோதரனை தனது நண்பர்களுடன் அழைத்து சென்று மது கொடுத்தாக கூறப்படுகிறது. அப்போது மீண்டும் காதல் தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழரசன் திடிரென அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, தாமோதரனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து வயல் பகுதியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன், பரத், 17 வயது சிறுவன் மூவரையும் கைது செய்தனர்.
இதில், கைது செய்யப்பட்டு தமிழரசன் மற்றும் 17 வயது சிறுவன் இருவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிழுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்