”அசுரனை வென்ற இடம்”… கொடியேற்றத்துடன் துவங்கிய ஆவணி திருவிழா… திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்..!
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழர் போற்றும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்தது மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. மற்ற ஐந்து கோவில்களும் மலையில் உள்ளன என்பது குற்ப்பிடத்தக்கது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
ஆவணி திருவிழா:
இத் திருத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த விழாவை காணபதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கொடியேற்றம்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடி அரோகர அரோகர என்று முழக்கமிட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
இன்று விமர்சையாக நடைப்பெற்ற கொடியேற்றத்திற்காக அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உத மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடி மரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பன்னிரண்டு நாட்கள் திருவிழா:
செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க உள்ளனர்.
12 நாட்கள் நடைறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஐந்தாம் நாள் குடவரைவாயில் தீபாராதனையும், ஏழாம் நாள் (30.08.2024) அன்று முருகப் பெருமான் சிவப்பு சாத்தி கோலத்திலும் , எட்டாம் நாளில் (31.08.2022) பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி காட்சி கொடுக்க உள்ளார் .
செப்டம்பர் 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க திரள்வார்கள் என எதிர்பார்க்கபடுவதால் இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரக்கூடிய பக்தர்களின் வசதிகளுக்காக பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த் ராஜ் தலைமையில் கூடுதலாக 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்