சேலம் அருகே ஒரு நபர், தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனின் அவல நிலையைக்கண்டு மன உளைச்சலால் விபரீத முடிவில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திராநகரை சேர்ந்தவர் சிவராமன். இவர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இவரது மனைவி வசந்தா மற்றும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் 2வது மகன் திலக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2வது மகனான திலக், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 6 வயதுடைய வாய் பேச முடியாத மகன் ஆகியோர் வசித்து வந்தனர். வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தந்தை திலக் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டிலிருந்த தாய், தந்தை, மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு திலக், தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கொடுத்துவிட்டு அவரும் மடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே மகேஸ்வரி, தனது சகோதரர் ஒருவருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அவர், மகேஸ்வரியின் வீட்டின் அருகே உள்ள நபர்களுக்கு தொலைபேசியின் மூலமாக தொடர்புகொண்டு மகேஸ்வரியின் வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.