திருச்செந்தூர் அருகே உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கலின் போது சத்திய பிரமாண பத்திரத்தில் சிறை தண்டனையை குறைத்து காண்பித்ததால் நாலுமாவடி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராஜேஷ் நீதிமன்ற உத்தரவுபடி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜேஷ் என்பவர் 7-வது வார்டில் போட்டியிட்டு வார்டு மெம்பராக வெற்றிபெற்று துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்துவருகிறார்.
இந்த நிலையில் ராஜேஷ் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை 2 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நாலுமாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் நாலுமாவடி ஊராட்சியில் ராஜேஷின் 7-வது வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி திமுக பிரமுகரின் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.