நாடாளுன்றத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடையில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ந் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. புதிய கட்டிடத்துக்கு மாறும்போது, பாராளுமன்ற ஊழியர்களின் சீருடையும் மாறுகிறது. தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களிடம் புதிய சீருடை எப்படி அமைய வேண்டும் என்று யோசனை கேட்கப்பட்டது. அந்நிறுவனங்கள் அளித்த வடிவமைப்புகளில் இருந்து ஒன்றை நிபுணர் குழு தேர்வு செய்துள்ளது.
நாடாளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பிரிவுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு நிறத்தில் சபாரி சூட்டை சீருடையாக ஊழியர்கள் அணிந்து வந்தனர். புதிய சீருடை, இந்திய தன்மையுடன் அமைந்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கு ‘நேரு ஜாக்கெட்’ பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட்டையில், ஏராளமான ‘தாமரை’ படங்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 271 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் அனைவரின் உடையிலும் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தாமரை தேசிய சின்னமாக இருந்தாலும் பாஜகவின் கட்சி சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே புது புது அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி உண்டாக்கி வரும் நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களின் உடையில் தாமரை இருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : அடேங்கப்பா.. என்னா வேகம்.. பாதையாத்திரையில் குறுக்கிட்டு பாஜகவை பதற வைத்த காட்டெருமை..!