இமாமி ஜமீன் கயிறு முழு வரலாறு..! சந்திரசேகர ராவ் கையில் உள்ள பட்டை..?
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் எப்போதுமே தன் கையில் ஒரு பட்டையை கட்டியிருப்பார். அதை ஏன் கட்டியிருக்கிறார்..? அவருக்கு அதை முதன் முதலாக கட்டி விட்டது யார்..? என தெரியுமா இதில் படிக்கலாம் வாங்க..
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறப்பால் ஒரு இந்து. ஆனால் அவரது வலது கையில் அவர் எப்போதுமே கட்டியிருக்கும் அந்த பட்டையின் பெயர் இமாமி ஜமீன் (Imam-e-Zamin) இதை அவருக்கு முதல் முதலில் கட்டியவர் தெலுங்கானா மாநில முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த முகமது அலி.
இதை ஏன் கட்ட வேண்டும்..? இஸ்லாமிய நம்பிக்கையில் அந்த பட்டை பாதுகாப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இறை தூதரின் மருமகன் ஒரு முறை ஒரு வேடன் ஒரு மானை பிடித்து அதை கொல்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்தார். அந்த மானோ இறைத்தூதரின் மருமகனை கண்டதும் அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு அவரிடம்,
“அய்யா என் வரவை எதிர்பார்த்து என் இரண்டு மான் குட்டிகள் பசியோடு காத்திருக்கின்றன. அவற்றிக்கு நான் பால் தர வேண்டும். பால் தந்து முடித்து அவற்றின் பசியை போக்கிய உடன், நான் இந்த வேடனிடம் திரும்ப வருகிறேன். தாராளமாக என்னை கொல்லட்டும். இப்போது மட்டும் நான் என் கடமையை செய்ய அனுமதி தரச் சொல்லுங்கள்…” என மன்றாடியது.
இறைத் தூதரின் மருமகனும் அந்த மானுக்காக அந்த வேடனிடம் பேசினார். அந்த மான் உறுதியாக திரும்பி வரும். அப்படி வராவிட்டால் அதற்குப் பதிலாக தன்னைக்கொன்று விடுமாறு வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட அந்த வேடன் அடையாளத்திற்காக அந்த மானின் காலில் ஒரு துணியை பட்டை போல கட்டினான்.
மானும் துள்ளிக் குதித்து சென்று தன் குட்டிகளுக்குப் பால் தந்து பசியைப் போக்கியது. ஆசை தீர தன் குட்டிகளுக்கு முத்தங்களைத் தந்தது. பின் கண்ணீர் மல்க அவற்றிடம் விடை பெற்று வேடனிடம் வந்தது. மான் திரும்ப வந்ததைக் கண்ட வேடன் திடுக்கிட்டுப் போனான்.
அதன் பின்னரே மானுக்குப் பதிலாக தன்னை பலி கொள்ள சொன்னவர் இறைத் தூதரின் மருமகன் என்பதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு அந்த மானை விடுதலை செய்தார். இறைதூதரின் மருமகன் மூலமாக இறைவன் அந்த மான் காலில் கட்ட வைத்த அந்த பட்டை தான் அந்த மானை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது.
அதனால் தான் அதன் பெயர் இமாமி ஜமீன். அதனால் தான் இஸ்லாமிய மக்கள் தாங்கள் நேசிக்கும் மனிதரின் பாதுகாப்பிற்காக அந்த பட்டையை கையில் கட்டி விடுவார்கள். அதைத் தான் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர சேகர் ராவ் அவர்களுக்கு கட்டப்பட்டுள்ளது.
அவரின் பாதுகாப்பிற்காக அவர் மீது அன்பு கொண்ட இஸ்லாமிய மக்கள் அவரது கையில் இமாமி ஜமீனை கட்டி விட்டார்கள். சந்திரசேகர ராவ் மட்டுமல்ல, தெலுங்கானா மாநில முன்னாள் கல்வி அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டியும் கூட தன் கையில் அப்படியான இமாமி ஜமீன் கட்டியிருப்பார்.
ஆக, கையில் பட்டை கட்டிக் கொள்வது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை. தெலுங்கானா மாநிலத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையாக உள்ளது….
– லோகேஸ்வரி.வெ