பழுதை நீக்க சென்ற ஒப்பந்த ஊழியர்… மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கிய சோகம்…!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசை, மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன்(32). இவருக்கு திருமணமாகி சரண்யா(29), என்ற மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தநிலையில் நரேந்திரன் திருமழிசையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம் பணிக்கு சென்ற அவர் நேற்று திருமழிசை சிப்காட் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர் மோகன் என்பவருடன் நரேந்திரன் சென்றார்.
அப்போது மின்கம்பத்தில் மோகன் ஏறாமல் நரேந்திரனை மின் கம்பத்தில் ஏற்றிவிட்டு பழுதை சரிபார்க்க சொன்னதாக கூறப்படுகிறது. அதன்படி மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென நரேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்ததில் கம்பத்தின் மேல் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் மயங்கினார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் நரேந்திரனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நரேந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த நாகேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மின் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் நரேந்திரன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் ஆம்புலன்ஸ் கண்ணாடியையும் உடைத்தனர்.
அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளவேடு காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.