அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கு!!
ஒன்றிய அரசின் அதிகாரிகள் தவறு செய்யும் போது அதனை விசாரணை செய்வதற்கு, மாநில விசாரணை பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி, கடந்த 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது
வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும்போது, அவர்களை கைதுசெய்யும் அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவித்தனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், ஒன்றிய அரசு அதிகாரிகள் தவறுசெய்யும் போது பிடிபட்டால், மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல என்றும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரத்தை மீண்டும் இந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
