தடையை மீறி செயல்பட்ட நிறுவனம்..! தமன்னா தொடர்ந்த வழக்கு..!! நீதிமன்றம் உத்தரவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் அட்டிகா கோல்டு நிறுவனத்தின் விளம்பரப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரப் படத்தின் அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், அந்நிறுவனம் தொடர்ச்சியாக விளம்பரத்தை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், இதனை எதிர்த்து, தமன்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விளம்பரப் படத்தை ஒளிபரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இருப்பினும், விளம்பரத்தை அந்த நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்பியதாக கூறி, தமன்னா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தாங்கள் விளம்பரப்படத்தை நிறுத்தி விட்டதாகவும், ஆனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில், எங்களின் பழைய விளம்பரங்கள் பரவி வருகிறது.
இதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று வாதிடப்பட்டது. இதேபோல் பவர் சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகை தமன்னா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதரார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
-பவானி கார்த்திக்