“வைகோ” எனும் பேரொளி..! தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தேர்தல் பிரச்சாரகர் வைகோ..!
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952 ஆம் ஆண்டு, சிறுவனாக இருந்த காலத்திலிருந்து தேர்தல் பரப்புரைகளை உன்னிப்பாக கவனித்து வருபவரும், இடதுசாரி இக்கத்தின் மூத்த சிந்தனையாளர்களில் ஒருவரும், கலை, இலக்கிய, எழுத்துத் துறைகளில் பலருக்கு முன்னோடியாக விளங்கி வருபவருமான ஐயா எஸ்.ஏ.பெருமாள் அவர்கள்,
கடந்த மார்ச் மாதம் வெளியான அந்திமழை இதழில் கடந்தகால தேர்தல் பரப்புரை பாணியையும், தனது அனுபங்களையும் எழுதியிருந்தார். அதில், அவர் வியந்து பார்த்த தேர்தல் பிரச்சாரப் பேச்சு எதுவென்றால் நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாடுடையது தான் என்கிறார்.
அதைப்போலவே, தலைவர் வைகோ அவர்களின் பேச்சும் இருப்பதாக குறிப்பிட்டிருந்த அவர், “தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தேர்தல் பிரச்சாரகர் வைகோ” தான் என, தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்களுக்காக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றியதால், என் சொந்த கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வரும் இதழ்களை வாசிக்க முடியாமல் போனது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நேற்று தான்.. வீட்டில் ஓய்வாக இருக்கும் சூழல் வாய்த்தது. நேற்றிரவு 1 மணிவரை பல்வேறு கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது, ஐயா எஸ்.ஏ.பியின் கட்டுரையும் அதில் தலைவர் குறித்தான மதிப்பீடும் படித்த உடனேயே பரவசத்தையும், மகிழ்ச்சியையும் என்னுள் ஏற்படுத்தியது.
இன்றைய தேர்தல் களம் முழுவதுமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் பேச்சாளர் வருகிறார் என்றால். அதுவும் அவர் ஒரு தலைவர் என்றால் அவருக்காக விடிய விடிய பல மணிநேரம் காத்திருந்து அவருடைய சொற்பொழிவை மக்கள் கேட்டார்கள்.
பொதுக்கூட்டங்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டுச் சென்று பேச்சை ரசித்த காலம் அது. இன்றைய அரசியல் மேடை அப்படியில்லை. தேர்தல் பிரச்சார உத்தியும் மாறிவிட்டது. சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளும் அரசியல் மேடைகளுக்கான இடத்தை ஆக்கிரமித்து விட்டன.
அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சார உத்திகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி வருகின்றன. எவ்வளவு பெரிய கட்சி பொதுக்கூட்டம் நடத்தினாலும் பணம் கொடுக்காமல் கூட்டத்தை கூட்டினால், 200 பேருக்கு மேல் திரள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.
கட்சி நிர்வாகிகளே ஆர்வமுடன் கூட்டங்களுக்கு வருவது இல்லை. பொதுக்கூட்ட கலாச்சாரமும், பேச்சாளர்களின் முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்று சொல்வதை விட, என் பார்வையில், அதற்கான களம் மாறிவிட்டது என்று தான் சொல்வேன்.
திராவிட இயக்கத்தை பேசி பேசியே ஆட்சிக்கு வந்த கட்சி என்பார்கள். ஒருவகையில் அது உண்மை தான். திராவிட இயக்க சொற்பொழிவாளர் படை வரிசையில் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தார்கள்.
ஒருகட்டத்தில், அவர்களுடைய பேச்சு தான் சாமானியர்களை கோட்டைக்கு அனுப்பியது. கருத்தாக்க அளவில் இன்று அரசியல் எதிரிகளும் மாறிவிட்டார்கள். தேர்தல் பிரச்சாரமோ, கட்சியை வளர்த்தெடுப்பதோ.. நாம் பயணிக்க வேண்டிய வழிமுறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனபோதும், தமிழ்நாட்டின் தலைசிறந்த உணர்ச்சிகரமான பேச்சாளர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் யார் என பட்டியலிட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றில் “வைகோ” என்ற பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
தலைவர் வைகோ அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் “பென்ச் மார்க்” அப்படிப்பட்டது. இன்று மேடைகள் மாறியிருக்கலாம். ஆனால், நோக்கமும் தேவையும் முன்பை விட கூர்மைப்பட்டிருக்கிறது.
திராவிட இயக்க பாசறையை வலிமைப்படுத்த, அனைத்து தளங்களிலும் இயங்கக்கூடிய தகுதியோடு தலைசிறந்த பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்க வேண்டும். இன்று பேசுவதற்கான, எழுதுவதற்கான தளம் மாறியிருக்கலாம்.
ஆனால், களம் முன்பை விட சூடாக இருக்கிறது. களமாடுவதற்கு தகுதி வாய்ந்த அறிவார்ந்தப் படையை தான் நாம் இன்னும் வலிமைப்படுத்த வேண்டும்.
அகவே, இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை அப்டேட் செய்து கொள்வது அவசியம். வழிகாட்டுவதற்கு “வைகோ” எனும் பேரொளி நம் முன்னே இருக்கிறது. கைபிடித்து அழைத்துச் செல்ல இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ இருக்கிறார்.
சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!
– லோகேஸ்வரி.வெ