ரயிலில் இருந்து வந்த கெட்ட வாடை… திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, டெல்லியில் இருந்து ரயில் மூலமாக இறைச்சிகள் வந்துள்ளது. ஆனால், அது கெட்டுப்போன நிலையில் இருந்ததால், அதன் உரிமையாளர்கள், அந்த இறைச்சியை எடுக்க முன்வராமல், ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அறிந்த ரயில்வே அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறையினர், கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 556 கிலோ ஆட்டிறைச்சி, கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு எடுத்து சென்று அழிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆட்டிறைச்சிகள் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை என்றும், இந்த பார்சலில் முறையான முகவரி இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இனிமேல் வரும் உணவு பார்சல்களில், முகவரி இருப்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.