தெலுங்கானாவில் மரக்கடை குடோனில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் பொஹிகுடா என்ற பகுதியில் மரம் சார்ந்த பொருட்கள், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் குடோனில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் நிறைய இருந்தன.
மேலும், இந்த கடையில் வேலை செய்து வரும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் குடோனிலேயே தங்கி வந்தனர்.
இந்நிலையில், இன்று(மார்ச்.23) அதிகாலையில் திடீரென அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்றுநேரத்தில் தீ மளமளவென எரிந்து கிடங்கு முழுவதும் பரவியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரே ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக விசாரித்து வருவதாகவும் காந்தி நகர் எஸ்.எச்.ஓ அதிகாரி தெரிவித்துள்ளார். ஷாக் சர்க்யூட் ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும்,குடோனில் இருந்த தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர். என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.