ஜம்மு காஷ்மீரில் பாஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற சுற்றுலாப்பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் ஆதில் அக்மது தோக்கரும் ஒருவர். இவர், ஆனந்த்நாக் மாவட்டத்தில் கர்ரே என்ற கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 2018ம் ஆண்டு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு மாணவர் விசாவில் சென்றுள்ளார். பின்னர், அங்கு இந்தியாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
பின்னர், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதி வழியாக ஆதில் இந்தியாவுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி உயர்ந்த மலைமுகடுகளையும் , அடர்ந்த வனத்தையும் கொண்டது. இதனால், இங்கு இந்திய ராணுவத்தின் நடமாட்டம் குறைவாக இருக்கும். இதை பயன்படுத்தி ஆதில் இந்தியாவுக்கு நுழைந்துள்ளார். இவருடன் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூசா உள்ளிட்ட 4 பேர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அடர்ந்த வனம் வழியே இவர்கள் ஆனந்த்நாக் மாவட்டத்தை சென்றடைந்துள்ளனர்.
ஹாசிம் மூசா உள்ளிட்டவர்கள் காஷ்மீரில் தங்க ஆதில்தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பின்னர், ஏப்ரல் 22ம் தேதி 1.50 மணிக்கு தங்கியிருந்த இடத்தில் இருந்து பைன் மரக்காடுகள் வழியாக பைசரன் பள்ளத்தாக்குக்கு சென்று இந்த கொடிய கொலைகளை செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஆதிலின் தாயார் ஷேஷதா கூறுகையில், கடந்த 8 வருடங்களாக என் மகன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. இப்போது, இந்த கொலைகளை செய்துள்ளதாக கூறுகிறார்கள். இதை, அவன் செய்திருந்தால் உடனே சரணடைய வேண்டும். இல்லையென்றால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றாலும் கவலை இல்லை. நானும் எனது இரு மற்ற குழந்தைகள் இங்கு வசித்தோம் . நாங்கள் தீவிரவாதத்துக்கு துணை போனதில்லை. ஆனால், எங்கள் வீடுகளை உடைத்து விட்டார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆதில் வீடு நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முன்னதாக, வீட்டில் இருந்த அவரின் தாய் உள்ளிட்ட மற்றவர்கள் அப்புற்ப்படுத்தப்பட்டனர்.