கோடை வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாட்களில் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை விட்டுவிடுவார்கள். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து, குளிர்ச்சியாக ஊர் சுற்ற நினைப்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அசத்தலான திட்டத்தை அறிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், கோடை காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர்கள் முதற்கொண்டு வெளிநாட்டினர் வரை குவியும் பிரபலமான கோடை வாசஸ்தலமாக உள்ளது. இருப்பினும் ஊட்டியை விட கொடைக்கானலில் சுற்றுலா செலவினங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் சுற்றுலாவை சாமானிய மக்களும் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 150 ரூபாய் கட்டணத்தில் அரசு பேருந்தில் 12 இடங்களை சுற்றிப்பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது.
இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
1. Upper lake View
2. Moyar Point
3. Pine Forest
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கால்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு வியூ பாயிண்ட்
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop)
ஆகிய இந்த 12 சுற்றுலா இடங்ளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணம்.
12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படுகிறது.
அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த ஆஃபர் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் இருக்கும்.
இந்த பேருந்துகள் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. அப்புறம் என்ன கிளம்புங்க ஜாலியா வெறும் 150 ரூபாய்ல கொடைக்கானலை சுத்திட்டு வரலாம்…
Discussion about this post